கல்கியின் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்), ஆசிரி யர்: கல்கி, வெளியீடு: நக்கீரன், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014.    பக்.: தொகுதி 1-304, தொகுதி 2- 344. விலை: ரூ.100, ரூ.120/-

கல்கியின் சிறுகதைகளுக்கு அறிமுகம் தேவையில்லை. முதல் தொகுதியில் 12 கதைகளும், இரண்டாவது தொகுதி யில் 27 கதைகளும் இடம் பெற்றுள்ளன. இந்தத் தலைமுறையினருக்கு கல்கியின் சிறுகதைகளை ஒரு சேரப்படிக்க வாய்ப்பு கிடைப்பது அபூர்வம். இந்தத் தொகுதிகள் மூலம் அது கைகூடியிருக்கிறது. நகைச்சுவையும், சமகால சமூகச் சிந்தனையும், வரலாற்று உணர்வும் மிக்க கல்கியின் ஒவ்வொரு கதையும் ஒரு செய்தியைச் சொல்லும். “நான் எப்படி சிறைக்கு வந்தேன் என்று கேட்கிறீர்களா? கள்ளுக்கடை வழியாகத்தான்”, இன்னொரு கதையில்,“ஆபரேஷன் வெற்றிகரமாய் நடந்தது- மகாராஜா காலமாகிவிட்டார்.” இப்படி குத்தூசி இறக்குவது போல் எழுத கல்கியால் அன்றி வேறுயாரால் முடியும்? இன்று எழுத்தாளராக ஆசைப்படுகிற ஒவ்வொரு வரும் கட்டாயம் வாசித்தாக வேண்டிய எழுத்தாளர்களின் பட்டியலில் முதல் பத்து இடத்துக்குள் கல்கி இடம்பெறுவார். வாசித்து அதை அனுபவியுங்கள்.